18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு



இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்ததால், உலகளவில் அவர்களின் விவரங்களைக் கொண்டு மோசடி, திருட்டு, இணைய வழி திருட்டு முதலானவற்றில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

கடவுச்சொற்களைத் திருடி, அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விடுகின்றனர். திருடப்பட்ட கடவுச்சொற்களை டார்க் வெப் (Dark Web) தளங்களில் விற்று, தவறான பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர்.

மின்னஞ்சல், கூகுள், முகநூல், டெலிகிராம் முதல் அரசின் இணையத்தளங்கள் வரையில் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன.

ஒருவரின் மொபைல் எண்ணுக்கு குறிப்பிட்ட வலைத்தளத்தின் இணைப்பை அனுப்பி, தளத்துக்குள் செல்ல சில விவரங்களை உள்ளிட (Log-in) வைக்கின்றனர், ஹேக்கர்கள். அவ்வாறு, தங்களின் விவரங்களை உள்ளிட்டவுடன், அவற்றை சேமித்து, டார்க் வெப் தளங்களில் சட்டவிரோதமாக ஹேக்கர்கள் விற்று விடுகின்றனர்.

இதுபோன்ற தனிநபர்களின் விவரங்களை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதால், எதுவுமறியாமல் தங்கள் விவரங்களை உள்ளிட்ட சாதாரண சாமானியன்தான் பாதிக்கப்படுகிறான்.

கொஞ்சம் அறிவு மற்றும் பணம் இருந்தாலே போதும் – டார்க் வெப் தளங்களில் இருந்து சட்டவிரோதப் பயன்பாட்டுக்கான விவரங்களைப் பெற்று விடலாம்.

இருப்பினும், இதுபோன்ற குறுஞ்செய்திகளிலோ மின்னஞ்சல்களிலோ இருந்து பெறப்படும் தெரியாத இணைப்புகளில் உள்செல்ல வேண்டாம் என்று சைபர் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவற்றைத் தவிர்ப்பதால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியும் என்கின்றனர் சைபர் ஆய்வாளர்கள்.

(colombotimes.lk)