அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்குக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை மறைப்பவர்களுக்கு எதிராக சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
தனி உரிமையாளர் அதிக விலைக்கு அரிசி விற்று, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் 500,000 ரூபாய் முதல் 5,000,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கப்படலாம்.
அத்துடன் அதிக விலைக்கு விற்பனை செய்த பொருட்களை அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கவும் நீதிமன்றத்தால் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இரண்டாவது முறையாகக் குற்றம் செய்தால், அபராதத் தொகையின் இரு மடங்கு அபராதமும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)