இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது.
(colombotimes.lk)
