தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கைப் போக்குவரத்து சபையும், தொடருந்துத் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
இந்தநிலையில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 350 பேருந்துகள் மேலதிகமாக இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை, சொந்த இடங்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களுக்காக விசேட பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளையும் நாளை மறுதினமும் விசேட பேருந்துகள் அதிகாலையில் இருந்து இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அவற்றையும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில் அரை சொகுசு கட்டணத்தின் கீழ் பேருந்துகளை இயக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)